கடலோரத்தில் வாழும் மீனவ மக்களின் பிரச்னை எண்ணிலடங்கா. விஞ்ஞானம் வளர.. வளர மீனவர்களின் பிரச்னைகளும் வளர்ந்து கொண்டே வருகிறது.
நாட்டை சீர்ப்படுத்த, தொழில்மயமாக்க மின்மயமாக்க, பாதுகாக்க, நடுவண் அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு பணியும் கடலையும், கடலோர நிலப்பகுதிகளையுமே பாதிக்கின்றன. நாட்டுப்பற்று மீனவர்களுக்கு மட்டும்தானா? இல்லை எல்லோருக்கும் பொதுவானதா?
கடலில் ஆறுகள் கலக்கும் பல மாவட்டங்கள் உள்ளன. அந்த இடத்திற்கு முகத்துவாரம் என்று பெயர். இங்குதான் கடல்வாழ் உயிரினங்கள் முட்டையிட்டு இனவிருத்தி செய்து கொள்கின்றன. இவைகள் எல்லாம் தூர்ந்துபோனால் என்னவாகும்?
மீனவர்கள் வாழும் பகுதியில் பள்ளிக்கூடம் அமைப்பது மிகவும் கடினம். காரணம், சாலை போக்குவரத்தோ, பேருந்து வசதிகளோ கிடையாது. ஆதலால், சுதந்திரத்திற்குப் பின் பல்லாண்டுகளாக மீனவர் குழந்தைகள் கடல் மணலில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். நல்ல காற்று வீசும்போது, ஓலைகளை வட்டமாகச் செய்து குண்டூசிகளுக்குப் பதில் மீன் முள்ளையே குத்தி அந்த வளையத்தை காற்று வீசும் திக்கு நோக்கி ஓட்டி அந்த வேகத்தில் ஓடி அதைப் பிடிப்பார்கள்.
கடலுக்குச் சென்ற உறவினர்கள் கொண்டுவரும் மீன், நண்டு ஆகியவற்றில் ஒன்றிரண்டை எடுத்து சுட்டு தின்பார்கள். கணவாயின் தோலை உரித்து, பானை கழுத்து அல்லது சட்டி, டப்பா ஆகியவற்றின் மீது ஒட்டி மேளம் அடித்து கூத்தாடுவார்கள். கணவாய் மீனை வட்டவட்டமாக பிய்த்து, விரல்களில் மோதிரமாக போட்டு மகிழ்வார்கள்.
இக்குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் வியர்க்க, வியர்க்க உழைப்பதாலும், விளையாடுவதாலும் இவர்களுக்கு இருதய நோய், இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் பெரும்பாலும் வருவதில்லை.
தெருக்கூத்து இக்கிராமங்களில் பிரசித்தி பெற்றவை. கோவலன், கண்ணகி, நல்லதங்காள், மதுரைவீரன், பவளக்கொடி, அல்லி அரச்சுனன் போன்ற நாடகங்கள் ஆண்டுக்கொருமுறை கோவில் திருவிழாக்களின்போது, கண்டுகளிப்பார்கள். அதிலுள்ள பாடல்களை மீனவக்குழந்தைகள் எல்லோரும் மனப்பாடமாக ஏறக்குறைய பாடுவார்கள். இவர்களின் விளையாட்டும், இவர்களின் தொழிலைச் சார்ந்ததாகவே இருக்கும்.
பள்ளிகளில் குழந்தைகள் ஒருவர்பின் ஒருவராக அமர்ந்து காலைநீட்டி உட்கார்ந்து சந்தில் இரு கைகளை வைத்து, “ராணிமுத்து திருடு போச்சு..! தேடி எடு.. தேடி எடு..!” – என்று பாடினால், ஒரு குழந்தை சுற்றி வந்து சரியான நபரைக் காட்ட வேண்டும். ஆனால், எங்கள் குழந்தைகள், “பதைக்குதாம்… பதைக்குதாம் பன்னாக்குட்டி..! எங்கையிலே இருக்குதாம்.. சூரக்கத்தி..!” – என்று பாடுவார்கள்.
இக்குழந்தைகள் ஆடும் கில்லி ஆட்டம்தான் இன்று கிரிக்கெட்டாக மாறியுள்ளது.
இப்படி நினைக்க.. நினைக்க இனிக்கும் என் சமுதாயச் சிறுவர்கள் வக்கீலாக, டாக்டராக, இன்ஜினியராக, பேராசிரியர்களாக, கடற்படைத்தளபதிகளாக, விண்வெளி வீரர்களாக வரவேண்டும் என்று கற்பனை செய்கிறேன். இதுவே என் நோக்கம். இதற்காகப் பாடுபடுவதே வாழ்க்கை..!”
- கடல்வளமும், கடலாளி மக்களும் நூலில் வி.ரமணிபாய்.
படங்கள்: இக்வான் அமீர்